இடுகைகள்

அக்டோபர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னத்தைச் செய்தீங்க...(5)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக்கதை - ஐந்தாவது பகுதி) கடந்தது சிலநாட்கள் கனத்த மௌனத்துடன் நகர்ந்தது சிலபொழுது நேர்கொள்ளாப் பார்வையுடன் நிலவிட்ட மன இறுக்கம் சங்கடம் கொடுத்தாலும் துலங்கிட்ட ஒருவழியைக் கண்டுகொண்டார் செல்வமணி. புலர்ந்திட்ட அன்று புதியதோர் காலையில் மலர்ந்திட்ட விழிகள் மகிழ்ச்சியில் அகன்றிட கோலமிட்ட வாயிலில் கொள்ளை அழகுடன் வந்து இறங்கியது வாகனம் ஒன்று... வாகனம் கண்டதும் விழிகளில் வியப்புடன் தாயிடம் சொல்லிடச் சென்றனர் பிள்ளைகள் கல்லிலே தோசையைக் காயவே விட்டுவிட்டு நல்லநாள் வந்ததென வாசல்வந்தாள் சிவகாமி... என்னதான் என்மீது கோபம் கொண்டாலும் என்னவருக்கு என்மேல் பாசம் அதிகம்தான் என்று மனமகிழ்ந்து "என்னங்க" என்றவாறு சென்று கணவனை எழுப்பினாள் சிவகாமி... மக்களும் மனைவியும் மகிழ்ந்ததைக் கண்டாலும் மனதின் ஓரத்தில் மருட்சியும் தென்பட போவது வரைக்கும் போகட்டு மென்றெண்ணி வாகனம் நோக்கிச் சென்றார் செல்வமணி.

என்னத்தைச் செய்தீங்க...(4)

என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை- நான்காவது பகுதி) என்று பதிலுரைத்தார் எண்ணத்தை எடுத்துரைத்தார் கொன்று விடுவதுபோல் கோபம்கொண்டு நின்றவளை சொல்லித் திருத்திடவோர் வழியேதும் அறியாமல் மெல்லக் கரம்பிடித்தார் மின்னல் பாய்ந்த மரமானார்... கன்னல் கரும்பே கனியமுதே என்றுசொல்லி கல்யாணம் கழிந்தபோது காதலுடன் கைப்பிடிக்க மெல்லத் தலைகுனிந்து உள்ளம்சிதைத்த பெண்ணை எங்கே தொலைத்தேனென்று ஏங்கினார் செல்வமணி... கணவனின் மனப்போக்கை அறியாத மடமையுடன் நினைத்ததை நடத்திடும் பிடிவாதம் பிடித்திழுக்க அடுத்த அம்பினை ஆத்திரம் தோய்த்தபடி எடுத்து எறியலானாள் சினத்துடன் சிவகாமி... "என்னத்தைச் செய்தீங்க? எதை வாங்கித் தந்தீங்க? ஒண்ணுக்கு ரெண்டுபெற்று ஓடாகத் தேய்ந்தாலும் நாய்பட்ட பாட்டில் ஒரு நானோ வாங்கத் துப்பில்லை, என்ன இது அநியாயம்? என்று குரலுயர்த்த, மானம் போகுதென்று மனவருத்தம் கொண்டவராய் "போ நீ உள்ளே"யென்று புகைச்சலுடன் சொல்லிவிட்டுத் தானெழுந்து சென்றார் தன் நடையில் தளர்ச்சியுற்றார் தாயுடன் கைகோர்த்த மக்கள்கண்டு மனமுடைந்தார்.

என்னத்தைச் செய்தீங்க...(3)

என்னத்தைச் செய்தீங்க...(மூன்றாவது பகுதி) "அச்சச்சோ சிவகாமி, அழாதே நீ" என்றபடி, நிச்சயமாய் இன்றைக்குக் கலவரம்தான் என்றெண்ணி உச்சிமுதல் ஓடியதோர் அச்சத்தை மறைத்தவராய் "பச்சைப் பிள்ளைபோல் அழுதிடாமல் சொல்" என்றார். போகும் இடத்தினிலே பெருமையான வாழ்வுவரும் வீடும் வாகனமும் விருத்தியும் கூடுமென்று கரட்டுப்பட்டி ஜோசியர் சொன்ன கணக்கெல்லாம் கண்மூடும் முன்னாலே பார்ப்பேனோ மாட்டேனோ... என்று சலிப்பாகச் சொன்ன நிமிடத்தில் விளக்குப் போட்டதுபோல் துலங்கியது அந்நினைவு... "நீர்செழித்து நெல்விளையும் வயல்நிலத்தை விற்றுவிட்டு வாகனம் வாங்குவோம்" என்றது நினைவில்வர, ஆனாலும் சிவகாமி, அது அப்பாவின் குலச்சொத்து கோடையிலும் வாடையிலும் குறையாத நீர்வரத்து... சோறுதரும் மண்ணைவிற்றுக் காரை வாங்கி நிறுத்திவிட்டால் விலையரிசி வாங்கிஉண்ணும் நிலைவருமே கவனியென்றார்...

என்னத்தைச் செய்தீங்க -( 2)

என்னத்தைச் செய்தீங்க...(இரண்டாவது பகுதி) "என்னங்க, இதைப்பிடிங்க... என்றகுரல் கேட்டவுடன் கன்னத்தில் அறைந்ததுபோல் கனவொதுங்கி நிஜம்திரும்ப முன்நெற்றி வியர்வையினைப் பின்கையால் துடைத்தபடி கிண்ணத்துக் காப்பியினைத் தன்கையில் வாங்கிக்கொண்டார். ஆற்றிக் குடிப்பதற்கு அவசியம் இல்லெனினும் ஊற்றி மெதுவாக ஓசையின்றிக் குடித்துவிட்டு காற்றில்லாப் புழுக்கத்தால் கைத்துண்டால் விசிறிக்கொள்ள, "நேற்றைக்குக் கேட்டேனே, அது என்னாச்சு" என்றுகேட்டாள். என்னத்தைக் கேட்டாள்? என்று மனசுக்குள் முன்னுக்கும் பின்னுக்கும் துழாவித் தோற்றவராய், "எத்தனையோ கேட்டிருப்பாய் எதையென்று நான்நினைக்க?" சத்தம் தேய்ந்துவர முனகினார் செல்வமணி... "ஓ... அத்தனை அலட்சியமோ? என்று குரலுயர்த்தி, இத்தனை வருஷம் மாடாய் உழைச்சிருக்கேன் மக்களைப் பெத்து பத்திரமா வளர்த்திருக்கேன் எத்தனைதான் செய்தாலும் என் பேச்சுக்கு மதிப்பில்லை... என்று விழிகசக்கி கண்ணீரைப் பிழிந்தெடுத்து என்றோ நடந்ததெல்லாம் ஒவ்வொன்றாய் அடுக்கிவைத்து " அப்பாவின் வீட்டில் அரசியாய் வாழ்ந்திருந்தேன், இப்படி வந்து இங்கே வருந்துகிறேன் என்றழுதாள்.

என்னத்தைச் செய்தீங்க... (1)

படம்
என்னத்தைச் செய்தீங்க...(கவிதைக் கதை - முதல்பகுதி) தெள்ளியதோர் மாலைநேரம் புள்ளினமோ கூடுதேடும்... பள்ளிவிட்டு இல்லம்வந்து ஓய்ந்தமர்ந்தார் செல்வமணி. அவர், பிள்ளைகள் இருவரும் முற்றத்தில் பாண்டியாட, கள்ளமில்லா அவர்கள் புன்னகையைப் பார்த்தபடி, அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் சுமந்ததனால் முன்நெற்றி முடியெல்லாம் பின்னோக்கிப் படையெடுக்க, சுயேச்சையாய்ப் போட்டியிட்டுச் சுருண்ட வேட்பாளர்போல அயர்ச்சியாய் வாசலிலே அமர்ந்திருந்தார் ஆசிரியர்... அங்கே, கைநிறையப் பொன்வளையல் கழுத்திழுக்கும் பொன்வடங்கள் மின்னலெனக் கண்சிமிட்டி முகம்காட்டும் மூக்குத்தி, கன்னத்துச் சதையெழுந்து காதிரண்டை மறைத்துநிற்க கிண்ணத்தில் காப்பியுடன் வந்தமர்ந்தாள் அவர் மனைவி...

மொத்தமும் அழகுதான்...

மனதும் உயிரும் வாடித் தவிக்கையிலும் பூஞ்சோலை நிழலாய்க் குளிவித்த நினைவுகள்... ஆமணக்குச் செடியின் முள்ளுடைக் காயாய் மருந்தாகித் தப்பாமல் பயன் தந்த சுவடுகள்... சாமரம் வீசிய வார்த்தைகள் நெகிழ்ச்சியாய் வந்து விழுந்த பொன்னான நிமிஷங்கள்... தேம்பல் எழுந்திட தழுவிக் கரம்சேர்த்து அன்புடன் தேற்றி அரவணைத்த உறவுகள்... சாம்பல் மூடிய நெருப்பாய் மனசுக்குள் சோம்பலின் நிமிஷத்தில் சூடுதந்த வார்த்தைகள்... பாம்பின் விஷம்சிந்தி பாடாய்ப் படுத்தியெனை ஓங்கி உயரும்படி ஊக்கம்தந்த எதிர்ப்புகள்... அத்தனையும் எண்ணி அமைதியாய் யோசித்தால் மொத்தமும் அழகுதான் இப்புவி வாழ்க்கையில்!

காத்திருக்குமோ காதல்?

எத்தனையோ மலர்கள் தினம் இத்தரையில் உதிர்ந்தாலும் உன் கூந்தல் மலர்கள் மட்டும் காய்ந்தாலும் மணக்கிறது... பத்தியக்காரன் முன்னே பால்சோறு கண்டதுபோல் உன்னில் வைத்தவிழி விலக்க வழியின்றித் தவிக்கிறேன் நான்... புத்தனவன் அன்று போதியின்கீழ் துறந்ததெல்லாம் மொத்தமாய் வந்து எனைப் பற்றிப் படருதடி... பித்தனென்று சொல்வாயோ பேதை இளங்கொடியே! நான் சித்தனைப்போல் இன்று தத்துவங்கள் பேசுகின்றேன்... பெத்த மகன் எனக்கு என்னவோ ஆனதென்று அன்னை முத்தாரம்மன் கோயிலிலே மாவிளக்குப் போடுகின்றாள்... மொத்தமாகத் திருடியெனை மோகத்தில் புதைத்தவளே! என் அக்காவின் திருமணம் முடியும்வரை பொறுப்பாயோ???...